ஒகனேக்கலில் ஆர்பரித்தும் கொட்டும் வெள்ளம்…கடல் போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை…!!

By manimegalai aFirst Published Nov 20, 2021, 1:27 PM IST
Highlights

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி காவிரியாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையினால் ஒகனேக்கலுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பரிசலில் செல்லவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

      தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டலுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு சுமார் 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகனேக்கல் அருவிகளில் வெள்ள நீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது. மேலும் தொடர் கனமழையினால் சின்னாற்றில் நீர்வரத்து அதிகரித்து காவிரியில் கலக்கிறது.இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.  எனவே கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் உடமைகளோடு பாதுக்காப்பான இடங்களில் வசிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஒகேனக்கலில் உள்ள அருவிகள், நீர்வீழ்ச்சி பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டு வெள்ளக்காடாக மாறியுள்ளன. சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி என அனைத்து அருவிகளையும் மூழ்கடித்த படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மீது தண்ணீர் செல்வதால் நடைபாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஒகனேக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்கவோ மற்றும் பரிசலில் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகனேக்கலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்தினால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு  மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை  எட்டியது.  காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் ஒகேனக்கல் காவிரியில் இரு கரைகளையும் தொட்டபடி வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. எனவே மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு சுமார் 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஒடுகிறது. எனவே அணையின் பாதுக்காப்பு கருதி, அணைக்கு வரும் நீர் அப்படியே,வெளியேற்றப்படுகிறது . மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுக்காப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் பயிரிடப்பட்ட நெல், வாழை போன்றவை வெள்ளநீரில் முழ்கி சேதமடைந்துள்ளன. தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பால், மேட்டூர் அணை கடல் போல் காட்சியளிக்கிறது.

click me!