
Congress MP Karti Chidambaram Interview: தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வலுவாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. ஆனால் அதிமுக, பாஜக கூட்டணியை அதிமுகவில் உள்ள தொண்டர்களே விரும்பவில்லை'' என்றார்.
அதிமுக, தவெக குறித்து பேசிய கார்த்தி சிதம்பரம்
தொடர்ந்து பேசிய கார்த்தி சிதம்பரம், ''தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு வாக்கு வங்கி உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று கூறிய அதிமுக இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? என்று அதிமுக தொண்டர்கள் கேட்கின்றனர்'' என்று தெரிவித்தார்.
மேலும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து பேசிய அவர், ''தவெக தேர்தலில் எந்த அளவு வாக்கு பெறும் என்று தெரியவில்லை. அரசியல் கட்சி என்றால் அனைத்து பிரச்சனைகளிலும் கருத்து கூற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி கூறியதாக தெரியவில்லை. தேர்தலில் தவெக தனித்து நிற்குமா? இல்லை கூட்டணி அமைக்குமா? என்பது தெரியவில்லை'' என்றார்.
காங்கிரஸ் ஆட்சி இல்லாதது வருத்தம்
மேலும் ''பாமக சட்டப்பேரவை தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுக்கும்? என்பது தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியினர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டுவது தவறில்லை. ஏனெனில் அனைத்து கட்சிகளுக்குமே அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். விசிகவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் அந்த ஆசை இருக்கும்.
தமிழ்நாட்டில் 1967ம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி இல்லை என்ற வருத்தம் எனக்கும் உள்ளது. ஆனாலும் தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது.'' என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது
மேலும் இந்தியா கூட்டணிக்கு எதிர்காலம் இல்லை என பேசிய தனது தந்தையும், எம்.பி.யுமான ப.சிதம்பரம் குறித்து பேசிய கார்த்தி சிதம்பரம், ''அவரது (ப.சிதம்பரம்) பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அவர் பாஜக கூட்டணி வலிமையாக உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் இந்தியா கூட்டணி வலிமையாக மாற வேண்டும் என்று தான் அவர் பேசினார். தமிழகத்திலும் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது'' என்றார்.
பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்
தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் மோதல் குறித்து கருத்து தெரிவித்த கார்த்தி சிதம்பரம் பஹல்காமில் பயங்கரவாதிகள் மதரீதியாக பிரித்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் காஷ்மீரில் பாதுகாப்பு இல்லாதது குறித்தும், பாதுகாப்பு குறைபாடு குறித்தும் கேள்விகள் இருக்கின்றன. எனவே நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் ராணுவ அமைச்சர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.
குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் பதில் அளிக்க வேண்டும்
மேலும் தமிழக ஆளுநர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் கடிதம் எழுதியது குறித்து பேசிய கார்த்தி சிதம்பரம், குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. இந்த பிரச்சனையில் முதல்வர் ஸ்டாலின் பிற மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருப்பது வரவேற்றக்கத்தக்கது என்று தெரிவித்தார்.