
லாரியை திருடி மர்ம நபர்
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே மணல் ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி வந்துக்கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநர் டீ குடிப்பதற்காக லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் லாரியில் உள்ளே ஏறி தேசிய நெடுஞ்சாலை வழியாக லாரியை சென்னையை நோக்கி கடத்தி செல்ல முயன்றுள்ளார்.
லாரியில் 10 கி.மீ. தொங்கியபடி சென்ற போக்குவரத்து காவலர்
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் அலறி கூச்சலிட்டபடியே அருகில் இருந்த காவலரிடம் தெரிவித்தனர். ரோந்து பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக இந்த தகவல்களை அருகில் இருந்த காவலர்களுக்கு வாக்கி டாக்கி வழியாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பேரிகாட்டுகள் ஆகியவற்றை அமைத்து, லாரியை தடுத்து நிறுத்த முயற்சி செய்தும் லாரியை தடுத்து நிறுத்த முடியவில்லை. பின்னர் மகேந்திரா சிட்டி சிக்னலில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் முருகன், லாரியில் ஏற முயன்று 10 கி.மீ. தொங்கியபடி சென்றார்.
சினிமாவை மிஞ்சும் அளவுக்கு சேசிங்
ஏராளமான வாகன ஓட்டிகள் மற்றும் காவலர்களும் லாரியை பின் தொடர்ந்து சென்றனர். சினிமாவை மிஞ்சும் அளவுக்கு சேசிங் இருந்தது. ஒரு வழியாக மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே லாரியை, மர்ம நபர் தடுப்பு மீது மோதி நிறுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்றார். அப்போது போலீசார் சுற்றி வளைத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.