தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையர் பதவி விலகுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. உத்தேச தேர்தல் தேதியை வெளியிட்டு அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மார்ச் 14 அல்லது 15 தேதியில் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினிமா செய்துள்ளார். அவரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார்.
தேர்தல் ஆணையர் குழுவில் மூன்று பேர் இடம்பெற்றிருக்க வேண்டிய நிலையில், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார். தற்போது, அருண் கோயலின் ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் நாட்டில் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே எஞ்சியிருக்கிறார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா ஏன்? தப்பா இருக்கே.. சந்தேகம் எழுப்பும் கிருஷ்ணசாமி.!
அருண் கோயலின் பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளது தேசிய அளவில் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், தேர்தல் ஆணையர் பதவி விலகுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “விபரீதமான ஒரு திட்டம் இல்லாமல் பாஜக இவ்வாறு செய்ய மாட்டார்கள். சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒரு அதிகாரி பதவி விலகுவது சந்தேகமாக இருக்கிறது. பாஜக சொல்வதை இவர் கேட்கவில்லையா? அல்லது பாஜகவுக்கு இவரைவிட சமத்தாக இருக்கக்கூடிய ஒரு அதிகாரி தேவைப்படுகிறாரா? என்பது தெரியவில்லை. ஏதோவொரு பிளானை முன்வைத்துதான் இவ்வாறு செய்கிறார்கள் என நினைக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.