பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி மாயமாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதலமைச்சரின் சட்டஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த பெண் அதிகாரி புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. அதன்பின்னர் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
undefined
இந்த வழக்கில் தீர்ப்பளித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ராஜேஷ்தாஸுக்கு இரு பிரிவுகளில் 3 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.20,500 அபராதம், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்.சி.பி காவல்: டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவு!
இதையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர் அப்போது கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீட்டு வழக்கிலும் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, எப்போது வேண்டுமானாலும் ராஜேஷ் தாஸ் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில், பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை கைது செய்வதற்காக சென்னை தையூர் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸார் சென்றபோது, அவர் அங்கு இல்லாததால், அவர் தலைமறைவானது தெரியவந்துள்ளது.