போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை, டெல்லி சிறப்பு காவல்துறை நடத்திய சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ. 2,000 கோடி எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டது திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக, அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, அவரை பிடிக்கும் முயற்சியில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்கும் பொருட்டு லுக் அவுட் நோட்டிஸும் பிறப்பிக்கப்பட்டது.
undefined
3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருளைக் கடத்திய ஜாபர் சாதிக்: போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தகவல்
இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை டெல்லியில் வைத்து போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர். “போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படத் தயாரிப்பு, கட்டுமானத் தொழில், ரியல் எஸ்ட்டேட், ஹோட்டல் போன்ற பல்வேறு தொழில்கள் முதலீடு செய்துள்ளார். இவருக்கு முக்கியப் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது. அவரிடம் தீவிர விசாராணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று, ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.சி.பி போலீசாருக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. போலீசார் அவரிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.