
சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தமிழகத்துக்குள் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா வருவதைத் தடுக்குவது மாநில காவல்துறையின் பொறுப்பு. மற்ற மாநிலங்களில் இருந்து கடத்தல் நடைபெறுகிறது என்றால் அதில் மத்திய அரசுக்கும் பொறுப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். குறிப்பாக தமிழகத்துக்குள் கஞ்சா நுழையாமல் தடுப்பதில் தமிழக காவல் துறை தீவிரமாக செயல்பட வேண்டும் என்றார்.
தமிழகத்தில் பல இடங்களில் கஞ்சா எளிதில் கிடைக்கிறது. பல இளைஞர்கள் அதற்கு அடிமையாகி வருகின்றனர். இதனை இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என்றார். வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது கலாச்சார சீரழிவை காட்டுகிறது. இளைஞர்கள் கஞ்சா போதையினாலா அல்லது விளம்பரத்திற்காகவா இவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் குற்றவாளிகளை ஒடுக்க வேண்டும். காவல் துறை தங்களது பலத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். தீவிரமாக போராடுவோரிடம் பேசி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். காவல் துறை அடக்குமுறையை கையாளக் கூடாது. சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அளவுக்கு போராட்டம் சென்றால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிடமே இருக்க வேண்டும். அந்த அதிகாரம் மாநில அரசுக்கு மறுக்கப்பட்டால், அது கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் தான் உள்ளன. அந்த வரம்புக்குள்ளேயே கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். எல்லா கட்சிகளுக்கும் தனித்து போட்டியிட ஆசை இருக்கும். ஆனால் நடைமுறை நிலையை உணர்ந்து பேச்சுவார்த்தை மூலம் முடிவுகள் எடுக்கப்படும் என்றார். தேசிய அளவில் இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்குகிறது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு திமுக தலைமை வழங்குகிறது. அந்த கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது என்றார்.
தவெகவிற்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும். ஆனால் அந்த வாக்குகள் சீட்டுகளாக மாறுமா என்பது கேள்விக்குறிதான். அமைப்பு ரீதியாக தேர்தலை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதும் இன்னும் தெளிவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இல்லாததால் எங்களை அவர்கள் விமர்சிக்கவில்லை. பொதுவாக ஆட்சியில் இருப்பவர்களைத்தான் விமர்சிப்பார்கள் என்றார்.