கர்நாடக பேருந்துகள் மீண்டும் தமிழகத்திற்கு இயக்கம்…

First Published Dec 8, 2016, 11:44 AM IST
Highlights


ஓசூர்,

இரண்டு நாள்களாக நிறுத்தப்பட்டு இருந்த கர்நாடக பஸ்கள் மீண்டும் தமிழகத்துக்கு இயக்கப்பட்டன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 4-ஆம் தேதி அவரது உடல் நிலை கவலைக்கிடமாகி, 5-ஆம் தேதி காலை பதற்றமான சூழல் உருவானது. இதன் காரணமாக அன்றைய தினம் காலை முதல் கர்நாடக மாநில அரசு பேருந்துகள் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை.

கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு, மாலூர், கோலார், ஆனேக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட கர்நாடக மாநில அரசு பேருந்துகள் ஓசூர் வந்து செல்கின்றன.

இதே போல 300-க்கும் மேற்பட்ட கர்நாடக அரசு பேருந்துகள் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, மதுரை, திருச்சி, வேலூர், சேலம் உள்பட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் அனைத்தும் கடந்த 5-ந் தேதி காலை நிறுத்தப்பட்டன.

இதன் காரணமாக ஓசூரில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். ஓசூரில் இருந்து மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் கர்நாடக அரசு பேருந்துகளில் அங்குள்ள களாசிபாளையம் பேருந்து நிலையம் செல்வது வழக்கம். கர்நாடக பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடந்த 5-ந் தேதி தமிழக அரசு பேருந்துகளில் பெங்களூரு சாட்டிலைட் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பிற பேருந்துகளில் ஏறி சென்றார்கள். கடந்த 6-ந் தேதியும் கர்நாடக பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் தமிழக அரசு பேருந்துகளும் பெங்களூரு செல்லவில்லை. நேற்று முன்தினம் மாலை முதலமைச்சர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இயல்புநிலை திரும்பியது.

இதையடுத்து நேற்று காலை முதல் தமிழக அரசு பேருந்துகள் வழக்கம் போல பெங்களூருவுக்கு சென்றன. இதேபோல கடந்த 2 நாள்களாக நிறுத்தப்பட்டு இருந்த கர்நாடக அரசு பேருந்துகள் மீண்டும் தமிழகத்திற்கு இயக்கப்பட்டன.

ஓசூர் மற்றும் தமிழகத்தின் பிற நகரங்களுக்கு அம்மாநில பேருந்துகள் வந்து சென்றன. இதன் காரணமாக பயணிகள் நிம்மதி அடைந்தார்கள்.

click me!