சுற்றுலா பயணிகளுக்கு தடை…

First Published Dec 8, 2016, 11:36 AM IST
Highlights


கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அணையின் நுழைவாயில் அடைக்கப்பட்டு, அணைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் பெங்களூரு, ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கிருஷ்ணகிரி அணைக்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாள்களிலும், முக்கிய விழா நாள்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இதேபோல், ஈமகாரியங்கள் செய்யும் கிராமமக்கள் கிருஷ்ணகிரி அணைக்கு வருவது வழக்கம். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த 5-ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

இதையடுத்து, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பேருந்துகள் ஓடவில்லை. கடைகள் மூடப்பட்டன.

இந்த நிலையில் நேற்று காலை இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் பலர் குடும்பத்துடன் கிருஷ்ணகிரி அணைக்கு வந்திருந்தனர். ஆனால், அணைக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும், அணையின் நுழைவாயில் அடைக்கப்பட்டு இருந்தது.

கடந்த 6-ஆம் தேதி முதல் இன்று (வியாழக்கிழமை) வரை கிருஷ்ணகிரி அணைக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

click me!