குகேஷ் போல் 'தங்க' மகள் கண்ணகி நகர் கார்த்திகாவுக்கும் அள்ளி கொடுங்க! தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

Published : Oct 26, 2025, 11:09 AM IST
Kannagi Nagar  Karthika

சுருக்கம்

மற்ற விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்பட்ட தொகை மற்றும் மரியாதையை கபடியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

பஹ்ரைனில் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது. தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு சென்னையின் கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா முக்கிய பங்கு வகித்தார். தங்க மகள் கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழக அரசு விளையாட்டு போட்டுகளில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசுகள், ஊக்கத் தொகைகளை வாரி வழங்கி வருகிறது.

கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு வாரி வழங்க வேண்டும்

இதற்கு செஸ் சாம்பியன்கள் குகேஷ், பிரஞ்ஞானந்தா ஆகியோரை உதாரணமாக சொல்லலாம். உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழக அரசு 1 கோடி ரூபாய் வழங்கி இருந்தது. இதேபோல் எளிய பின்புலத்தில் இருந்து வந்து பெரும் சாதனை படைத்த கண்ணகி நகர் கார்த்திகாவுக்கும் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகிய வீரர்களுக்கு அளிக்கப்பட்ட தொகை மற்றும் மரியாதையை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

பா.ரஞ்சித் வாழ்த்து

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இயக்குநர் பா.ரஞ்சித், ''பஹ்ரைனில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதில் குறிப்பாக, தமிழகத்திலிருந்து சென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்த, ‘கண்ணகி நகரைச் சேர்ந்த’ வீர மகள் கார்த்திகாவிற்கு வாழ்த்துகள்.

கண்ணகி நகர் என்றாலே ஒவ்வாமை...

கண்ணகி நகர் என்றாலே ஒருவித ஒவ்வாமையுடன் பார்க்கும் சிங்காரச் சென்னையில், இன்றைக்கு ‘கண்ணகி நகர்’ என்கிற பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை எனும் அளவிற்கு இந்த வெற்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தகுதிக்கும் திறமைக்கும் எந்த வரையறையோ படிநிலையோ இல்லை என்பதையும் கார்த்திகா மெய்ப்பித்துள்ளார்.

அரசு பணி வழங்க வேண்டும்

பொதுவாக, இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழக அரசுப் பரிசுப் பொருட்களையும் அரசுப் பணியையும் வழங்கி கௌரவிப்படுத்திவருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பஹ்ரைனில் வெற்றி பெற்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற ஹரியானவைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு தலா 3 கோடி ரூபாய் வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

முன்னதாக, சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த தமிழக அரசு, கபடி போட்டியில் இந்தியாவின் வெற்றிக்காக அயராது உழைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கும் ஏனைய தமிழக வீராங்கனைகளுக்கும் அரசுப் பணியோடு கூடிய பரிசுத்தொகையை வழங்க முன்வர வேண்டும்.

கண்ணகி நகரில் கபடி மைதானம்

மேலும், கண்ணகி நகரிலேயே அதிநவீன கட்டமைப்பு வசதி கொண்ட, சிறந்த கபடி மைதானத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கபடி வீரர், வீராங்கனைகளின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி