திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி! டி.ஆர்.பாலு, திருச்சி சிவாவுக்கும் முக்கியப் பொறுப்பு!

By SG Balan  |  First Published Jun 10, 2024, 10:07 PM IST

முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களவை - மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை நியமித்துள்ளார். 


மக்களவை, மாநிலங்களவை என இரண்டுக்கும் சேர்த்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

2024 மக்களவைக்கான பொதுத்தேர்தலில் பாஜக கூட்டணி 293 இடங்களைப் பெற்று 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளையும் வென்றுள்ளது. இந்நிலையில், திமுகவின் புதிய உறுப்பினர்கள் நாடாளுமன்ற குழுத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களவை - மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை நியமித்துள்ளார். மக்களைவைக் குழுத் தலைவராக கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலுவும் மக்களைவைக் குழுத் துணைத் தலைவராக கழக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறனும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்களைவை கொறடாவாக துணைப் பொதுச்செயலாளராக  ஆ.இராசாவா செயல்படுவார்.

மாநிலங்களவைக்குழுத் தலைவராக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, மாநிலங்களவைக் குழுத் துணைத் தலைவராக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், மாநிலங்களவை கொறடாவாக தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இரு அவைகளின் பொருளாளராக கொள்கைப் பரப்பு செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று மத்திய அமைச்சரவை இலாகா விவரங்கள் முழுமையாக வெளியாகியுள்ள நிலையில், விரைவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!