பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி, இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பெரியார் சிலை- சர்ச்சை கருத்து
இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவையொட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. அப்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர். சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கனல் கண்ணன் பேசியுள்ளதாகவும், மேலும், 2006 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால் கலவரம் உண்டானது. அந்த சம்பவம் முடிந்து சுமார் 15 ஆண்டுகள் ஆன நிலையில் தற்பொழுது மீண்டும் கலவரத்தை உண்டாக்கும் வகையில் கனல் கண்ணன் பேசியுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே கனல்கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
கனல் கண்ணன் மீது புகார்
இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் கனல் கண்ணன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து கனல் கண்ணனை கைது செய்ய போலீசார் அவரது வீட்டிற்கு சென்ற போது வீட்டில் இல்லாத காரணத்தால் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளை கொச்சைபடுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கனல் கண்ணன் முன் ஜாமின் மனு
அதனாலயே அந்த சிலையை அதை இடிக்க வேண்டுமென பேசியதாக குறிப்பிட்டுள்ளார். தான் பேசியது இந்திய சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஶ்ரீரங்கம் கோயில் முன் சிலை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். சிவ பெருமானை அவதூறாக பேசி ஹிந்துக்களின் நம்பிக்கைகளை புண்படுத்திய 'யூ டூ புரூட்டஸ்' மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்ற தெரிவித்துள்ள கனல் கண்ணன், துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஜாமின் மனு மீதான விசாரணை நாளை அல்லது நாளை மறுதினம் விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படியுங்கள்
இபிஎஸ்க்கு போட்டியாக களமிறங்கும் ஓபிஎஸ்...! வட மாவட்ட நிர்வாகிகளோடு முக்கிய ஆலோசனை