காமராஜர் வீட்டை சுத்தம் செய்தோம்… எங்க மனசும் சுத்தமாயிடுச்சி !! இனி சத்தியமா குடிக்க மாட்டோம் !! மாணவர்கள் கண்ணீர் !!

By Selvanayagam PFirst Published Aug 16, 2019, 10:18 AM IST
Highlights

குடித்துவிட்டு வகுப்பறைக்குள் நுழைந்த மாணவர்களுக்கு காமராஜர் வீட்டை சுத்தம் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், அவ்வீட்டை சுத்தம் செய்த மாணவவர்கள் இனி குடிக்க மாட்டோம் என உறுதி எடுத்துக் கொண்டுள்ளனர். மேலும் காமராஜர் விட்டை சுத்தம் செய்தோம் எங்கள் மனசும் சுத்தமாகிவிட்டது கண்ணீர் மல்க தெரவித்தனர்.
 

மது அருந்திவிட்டு போதையில் வகுப்புக்குள் சென்ற அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மூன்றாமாண்டு மாணவர்கள் 8 பேரை நிர்வாகம் படிப்பதற்கு அனுமதிக்காத நிலையில், அவர்கள் தங்களை படிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். 
  
அம்மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் , மாணவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றமாகும். மனுதாரர்கள் தங்களின் தவறை ஏற்கெனவே உணர்ந்துள்ளனர். நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கல்லூரியில் ஒழுங்காக இருப்போம் என்று உறுதியளித்துள்ளனர். 

எனவே, சுதந்திர தினமான நேற்று  விருதுநகரில்  உள்ள காமராஜர் பிறந்த வீட்டில்,    காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணியினை  மேற்கொள்ள வேண்டும். காமராஜர் இல்லத்துக்கு வரும் பார்வையாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். 

இதையடுத்து  அந்த 8 மாணவர்களும் நேற்று விருதுநகரிலுள்ள காமராஜர் இல்லத்துக்கு சென்றனர். சுத்தம் செய்யும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டனர். அங்கு வந்த பொதுமக்களுக்கும் இயன்ற உதவிகளைச் செய்தனர். 


 
இதைத் தொடர்ந்து பேசிய அந்த மாணவர்கள், நீதிமன்றம் அளித்த உத்தரவை தண்டைனையாக நினைக்காமல் தங்களை திருத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக நினைத்தோம் என கூறினர்.

காமராஜர் இல்லத்தைச் சுத்தம் செய்தபோதே எங்கள் மனதும் சுத்தமாகிவிட்டது. குறிப்பாக, காமராஜர் சிலையைத் தொட்டுத் துடைத்தபோது உடல் சிலிர்த்தது. மாணவர்களாகிய எங்களின் எதிர்கால நலனில் உயர் நீதிமன்றம் அக்கறை எடுத்துக்கொண்டதை வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாகவே பார்க்கிறோம் என தெரிவித்தனர்.

மேலும் இனிமேல் சத்தியமாக குடிக்க மாட்டோம் என கண்ணீர் மல்க தெரிவித்தனர். அவர்களை அங்கு வந்த பொது மக்களும்., பேராசிரியர்களும் பாராட்டினர்.

click me!