
எங்கள் காளைகளை கையாள அமெரிக்காவில் பயிற்சி எடுங்கள்...‘பீட்டா’வுக்கு ‘சூடுபோட்ட’ கமல் ஹாசன்
பீட்டாவுக்கு எதிராக நடிகர் விஜய், சூர்யா ஆகியோர் குரல் கொடுத்த நிலையில், நடிகர் கமல் ஹாசன் நேற்று கடுமையாக விமர்சனம் செய்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு தடைவிதிக்கப்பட்டு இருந்ததில் இருந்தே அதற்கு எதிராக நடிகர் கமல் ஹாசன் குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு ஆங்கில வார ஏடு நிகழ்ச்சியின் போது பேசிய கமல் ஹாசன், ‘ ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்றால், பிரியாணியையும் தடை செய்ய வேண்டும்’ என்று கூறி தனது ஆதரவைத் தெரிவித்து இருந்தார்.
மேலும், ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தன் எழுச்சியாக இளைஞர்கள் மாணவர்கள் மாநிலம் முழுவதும் அறவழிப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதையும் நடிகர் கமல்ஹாசன் பாராட்டிப் பேசி இருந்தார், ‘மாணவர்கள் இனி ஆசான்கள்’ என்று உணர்ச்சி பொங்க பேசி இருந்தார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கு தடைவிதிக்க முக்கியக் காரணமாக இருந்த பீட்டா அமைப்புக்கு எதிராக நடிகர் சூர்யா, விஜய் கடுமையாக கருத்து தெரிவித்து இருந்த நிலையில், இப்போது நடிகர் கமல் ஹாசனும் டுவிட்டரில்கருத்து பதிவிட்டுள்ளார்.
அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ இந்தியாவில் உள்ள காளைகளையும், மாடுகளையும் கையாள பீட்டா அமைப்புக்கு தகுதி கிடையாது. ஆதலால்,டொனால்ட் டிரம்ப் அதிபராக இருக்கும் அமெரிக்காவில், அடங்க மறுக்கும் காளைகளுக்கு எதிராக பீட்டா முதலில் பயிற்சி எடுக்க வேண்டும். ஆதலால் பீட்டாஅமெரிக்காவுக்கு திரும்பி ச் செல்ல வேண்டும்.
உண்மையான ஜனநாயகத்தில் மக்கள் நீண்டகாலமாக இருந்தபோதிலும், அதற்கேற்ற நல்ல தலைவர்கள் அனைவரும் சென்று விட்டார்கள். புதிய பாதையை கண்டுபிடிக்கும் மற்றும் சமூக சீர்திருத்தத்துக்குமான தலைவர்கள் தான் இப்போது தேவை. ஆதலால் மாணவர்கள் செய்யும் போராட்டத்தைப் பார்த்து ஜல்லிக்கட்டுக்கு கூட அமெரிக்க குளிர்பானக் நிறுவனங்கள் ஸ்பான்சர் ஆகய வாய்ப்பு உண்டு. எச்சரிக்கையாக இருங்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.