கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தாய் செல்வி சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தாய் செல்வி சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். தனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கோரி வரும் அவர் இது தொடர்பாக முதல்வரை சந்திக்கப் போவதாக தெரிவித்து வந்த நிலையில் இன்று தனது குடும்பத்தினரும் முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 12ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ஆம் தேதி பள்ளிக்கூட வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. மாணவி பள்ளிக்கூடத்தில் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என பள்ளி நிர்வாகம் கூறிவருகிறது. ஆனால் மாணவி அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரின் பெற்றோர்கள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது, முன்னதாக கடந்த ஜூலை 17ம் தேதி பள்ளிக்கூட வளாகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் இளைஞர்கள் பள்ளி மீது தாக்குதல் நடத்தியதுடன், வாகனங்களை தீக்கிரையாக்கினர், இதையடுத்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ம்ற்றும் இரண்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி போலீஸ் வசம் மாற்றப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஸ்ரீமதியின் உடல் 2 முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையை ஜிப்மர் மருத்துவகுழு நீதிபதியிடம் தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் பள்ளி நிர்வாகிகள் உட்பட 5 பேருக்கு சென்னை உயர்நீதி மன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் முடிவு தெரியும் வரை அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், பள்ளிகூடம் இயங்க தடை விதிக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துவந்த நிலையில் நீதிமன்றம், பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் கொடுத்துள்ளது.
இந்நிலையில்தான் தனது மகளின் மரணம் வழக்கு விசாரணை திசை திருப்ப முயற்சிகள் நடக்கிறது என்றும், விசாரணை வெளிப்படையாக இல்லை என்றும், பள்ளி நிர்வாகம் தடயங்களை அழித்துள்ளது எனவும் மாணவியின் பெற்றோர்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். தங்கள் மகளின் மரணத்திற்கு தமிழக முதலமைச்சர் தான் நீதி வழங்க வேண்டும் என்றும், எனவே முதல்வரை நேரில் சந்திக்கப் போகிறோம் எனவும் கூறி வந்தனர், இந்நிலையில் ஸ்ரீமதியின் தாய் செல்வி மற்றும் அவரது கணவர் சகோதரர் இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று காலை நேரில் சந்தித்தனர்.
ஏற்கனவே முதலமைச்சர் தொலைபேசியில் மாணவியின் தாய்க்கு தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறியிருந்தார், மாணவியின் மரணம் தொடர்பான விசாரணை நேர்மையான முறையில் நடக்கும் எனவும் அவர் உறுதியளித்திருந்தார், இந்நிலையில்தான் முதல்வரை மாணவியின் பெற்றொர் நேரில் சந்தித்துள்ளனர்.