
ஜெயலலிதா மரணம் குறித்து கடந்த 5 வருடங்களாக நடைபெற்று வந்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்.
கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி திடீரென ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் உள்ளிட்டோர் கூறிவந்தனர்.
இதையும் படிங்க;- "அதிமுகவை கெடுத்த பாப்பாத்தி.. ஜெவை சாதி செல்லி திட்டினார் கே.பி முனுசாமி".. கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பகீர்.
இதனையடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், 14 முறை ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு 158 பேரிடம் ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்திருக்கிறது.
இதில் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், உதவியாளர், உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்களிடம் ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.
பல்வேறு விசாரணைகள், காலநீடிப்புகளுக்கு பிறகு ஒரு வழியாக விசாரணை அறிக்கையை ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், 600 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்ய அரசிடம் நேரம் கேட்டிருந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இறுதி அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்.
இதையும் படிங்க;- இபிஎஸ்க்கு சி.எம் பதவியை முன்பே ஜெயலலிதா கொடுத்திருந்தால்..! என்ன நடந்திருக்கும் தெரியுமா...? கோவை செல்வராஜ்