கள்ளக்குறிச்சி உயிரிழப்புக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். ஆட்சி , அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம். மக்கள் மீது அக்கறை இல்லை.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் தார்மிக பொறுப்பு ஏற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கள்ளச்சாரயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைநகரில் காவல்நிலையத்திற்கு அருகிலேயே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. கள்ளச்சாராய விற்பனைக்கு திமுக நிர்வாகிகள் பின்புலமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி உயிரிழப்புக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். ஆட்சி , அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம். மக்கள் மீது அக்கறை இல்லை. பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளின் கல்வி செலவை அ.தி.மு.க.ஏற்கும். பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாதம் ரூ.5000 வழங்கப்படும். விஷச்சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு போதாது. ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றார். கள்ளச்சாராய விஷத்தை முறிக்கும் மருந்து தமிழ்நாட்டில் எந்த மருத்துவமனையில் இல்லை.
அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார் பலமுறை எஸ்.பி.யிடம் விஷ சாராய விற்பனை குறித்து புகார் தெரிவித்துள்ளார். கஞ்சா, விஷச்சாராய விற்பனை இப்பகுதியில் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக இருக்கிறது. கள்ளச்சாராயம் ஆறுபோல் ஓடுகிறது.
விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்கிறது. பூத் வாரியாக ஒன்றியத்துக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த அக்கறையை கள்ளக்குறிச்சியில் காட்டி இருக்கலாம். கள்ளச்சாராயத்தினால் யாரும் இறக்கவில்லை என மாவட்ட கலெக்டர், பச்சை பொய் சொல்கிறார். அரசுக்கு முட்டுக் கொடுக்கிறார். பிறகு எப்படி மக்களை காப்பாற்ற முடியும் என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார்.