பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழக மக்களால் குறிப்பாக பெண்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் இன்று தொடங்கப்பட்டது. பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைப்பது என் வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுவதாக தெரிவித்தார். மகளிர் உரிமை தொகையை பெண்கள் பெறும் வரை நானே ஆள்வதாக அர்த்தம் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
நிதிநிலை சரியில்லாத காரணத்தினால் தான் ஆட்சிக்கு வந்த உடன் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்று கூறிய முதலமைச்சர், தற்போது நிதிநிலை சற்று சரியானதும் ரூ.1000 மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததாக கூறினார். மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது, இது பெண்களின் உதவித்தொகை இல்லை உரிமை தொகை என்று தெரிவித்தார்.
மகளிர் உரிமைத்தொகை.. வங்கிக்கணக்கில் ரூ.1000 பணம் வந்துவிட்டதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மகளிருக்கு தொகையை கையாள்வது குறித்து கையேடு வழங்கப்பட்டது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு போலி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் பொன்மகள் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யவும் அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் மகளிர் உரிமை தொகை ஏடிஎம் கார்டு பாஸ்வார்டை வேறு யாருடனும் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி அழைப்புகளில் ஏடிஎம் விவரங்களை வழங்க வேண்டாம் என்றும் வங்கிகளில் இருந்து கேட்பதாக கூறி OTP அல்லது வங்கி விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை கிடைக்கும். ஒரே நாளில் அனைவருக்கு பணத்தை செலுத்த முடியாது என்பதால் தகுதியான பயனாளிகளில் சிலருக்கு நேற்றே ரூ.1000 பணம் வரவு வைக்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 5 நாட்களில், அதாவது செப்டம்பர் 20-ம் தேதிக்குள் உரிமைத்தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதற்கான எஸ்.எம்.எஸ் வரும் 18-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பம் ஏற்கப்படாத சூழலில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ் பெறப்பட்ட 30 நாட்களுக்கு இணைய சேவை வாயிலாக கோட்டாட்சியர்க்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.