விபத்தில் உயிரிழந்த கபடி வீரரின் உடல் அடக்கம்... ஊர் மக்கள் கண்ணீர் அஞ்சலி!

By vinoth kumarFirst Published Sep 12, 2018, 3:06 PM IST
Highlights

கபடிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு, சர்வதேச அளவில் நடந்த போட்டியில் சாதனை படைத்த ராணுவ வீரரின் உடல் உரிய ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

கபடிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு, சர்வதேச அளவில் நடந்த போட்டியில் சாதனை படைத்த ராணுவ வீரரின் உடல் உரிய ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சின்னமனூர் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தேனி மாவட்டம், சின்னமனூர், ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் - நாகம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் சுந்தர மகாலிங்கம் (29). இவர் இளம் வயதில் இருந்தே விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். 

சுந்தர மகாலிங்கம் கபடி போட்டியில் சிறந்து விளங்கினார். 2011 ஆம் ஆண்டில் இலங்கைக்கு சென்று சர்வதேச போட்டியில் பங்கேற்று வெற்றியுடன் திரும்பி வந்தார். டெல்லியில் நடந்த தேசிய போட்டியில் சிறந்த வீரராக தேர்வாகி 2 முறை தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். சுந்தர மகாலிங்கம் கடந்த 8 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். ஆனாலும் இவர், கபடி போட்டிகளில் 
பங்கேற்று ஏராளமான பரிசுகள் பெற்று வந்தார். 

கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஒத்தவீடு கிராமத்தில் புது வீடு கட்டினார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்து பெண் பார்த்து நிச்சயித்திருந்தனர். விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் கடந்த 9 ஆம் தேதி மதுரையில் பெண் பார்த்துவிட்டு சின்னமனூர் திரும்பி கொண்டிருந்தார். தேனி கருவேல் நாயக்கன்பட்டி அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் சுந்தரமகாலிங்கம் சம்பவ 
இடத்திலேயே பலியானார். 

இவரது உடல் சின்னமனூரில் உள்ள நகராட்சி மயானத்தில் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது. அவர இறப்புக்கு கிராமமே கண்ணீர் சிந்தியது. கபடிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டான் எங்கள் மகன் என்று சுந்தர மகாலிங்கத்தின் தாய் நாகம்மாள், தந்தை ஈஸ்வரன் கூறினர். மேலும் அவர் கூறும்போது, ஸ்போர்ட் கோட்டாவிலேயே படிப்பு, வேலை கிடைத்தது. திருமணம் நிச்சயித்த நிலையில் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றனர்.

கபடி பயிற்சியாளர் சுந்தரபாண்டியன் கூறும்போது, எங்கள் கிராம அணியை உச்சத்துக்கு கொண்டு சென்ற பெருமை சுந்தர மகாலிங்கத்தையே சேரும் என்றார். சர்வதேச அளவில் கபடியில் சாதித்துள்ளார். இவர் அணியில் இருந்தால் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. கபடி விளையாட்டால் சின்னமனூரை இந்தியாவிற்கு அடையாளம் காட்டிய சுந்தரமகாலிங்கம் இப்போது உயிருடன் இல்லை என்பது வருத்தமளிப்பதாக கூறினார்.

click me!