
கடலூர்
விருத்தாசலம் அருகே நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்து சாமி கழுத்தில் இருந்த நான்கு சவரன் நகைகள், மற்றும் உண்டியல் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ளது ரெட்டிக்குப்பம் கிராமம். இங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அதேப் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (58) என்பவர் பூசாரியாக இருக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு பூசாரி ராஜேந்திரன், கோவிலில் பூசைகள் முடிந்ததும் வழக்கம் போல கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
நேற்று காலை சீனிவாச பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள குளக்கரையில், உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. மேலும், சீனிவாச பெருமாள் கோவில் பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது.
இதை அந்த வழியாகச் சென்ற மக்கள் பார்த்து கோவில் பூசாரிக்கும், மங்கலம்பேட்டை காவலாளர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின்பேரில் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்ததில் நேற்று முன்தினம் இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டுச் சென்றதை பார்த்த மர்மநபர்கள் நள்ளிரவில், கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
மேலும், கோவிலில் மூலவர் சன்னதியில் உள்ள அம்மன் கழுத்தில் கிடந்த இரண்டு சவரன் சங்கிலி மற்றும் உற்சவர் கழுத்தில் இருந்த இரண்டு சவரன் சங்கிலியை கொள்ளையடித்து விட்டு, அங்கிருந்த உண்டியலையும் தூக்கிக் கொண்டு வெளியே வந்துள்ளனர்.
பின்னர், கோவிலின் அருகில் உள்ள குளக்கரையில் வைத்து உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டுச் சென்றுவிட்டனர் என்பது தெரியவந்தது.
உண்டியல் நீண்ட நாட்களாக திறக்காமல் இருந்ததால், அதில் ரூ.3 இலட்சம் இருந்திருக்கும் என்று மக்கள் தெரிவித்தனர். இதன் மூலம் கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.4 இலட்சம் இருக்கும் .
இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை காவலாளர்கள் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.