
கோயம்புத்தூர்
சொத்து பத்திரத்தை கேட்ட அண்ணனை, அரிவாளால் வெட்டி கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோயம்புத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆனைமலை அருகிலுள்ள குப்பிச்சிபுதூரைச் சேர்ந்த விவசாயி ஆறுசாமி. இவருக்கு முத்துகுமாரசாமி, விஜயராஜ், வரதராஜ், ஜெகஜீவன்ராம், பாலகிருஷ்ணன், அழகியன் என ஆறு மகன்கள் உள்ளனர்.
ஆறுசாமி, தனக்குச் சொந்தமாக குப்பிச்சிபுதூரில் உள்ள ஆறு சென்ட் நிலத்தை தனது மகன்கள் ஜெகஜீவன்ராம் (42), பாலகிருஷ்ணன்(38), வரதராஜ் ஆகியோருக்கு தலா இரண்டு சென்ட் வீதம் பிரித்துக் கொடுத்துள்ளார்.
அந்த இடத்தின் பத்திரம், பாலகிருஷ்ணனிடம் இருந்துள்ளது. அதைத் தருமாறு ஜெகஜீவன்ராம் கேட்டுள்ளார். ஆனால், பத்திரத்தை தராமல் பாலகிருஷ்ணன் காலம் தாழ்த்தினாராம்.
இந்த நிலையில், மற்றொரு சகோதரரான அழகியன் வீட்டில் 2016 அக்டோபர் 9-ஆம் தேதி பாலகிருஷ்ணன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஜெகஜீவன்ராம் பத்திரத்தைக் கேட்டு பாலகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன்தான் வைத்திருந்த அரிவாளால் ஜெகஜீவன்ராமை வெட்டியுள்ளார். அதில், பலத்த காயமடைந்த ஜெகஜீவன்ராம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், தாக்குதலைத் தடுக்க வந்த மற்றொரு சகோதரர் அழகியனை மிரட்டவிட்டு பாலகிருஷ்ணன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து ஆனைமலை காவலாளர்கள் வழக்குப் பதிந்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர் இந்த வழக்கு விசாரணை, கோவை, முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இறுதி விசாரணை நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் நாகராஜன் ஆஜரானார்.
இறுதிக் கட்ட விசாரணையை அடுத்து, கொலைக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5000 அபராதமும், கொலை மிரட்டலுக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பளித்தார்.