
விருதுநகரில், உங்களுக்கு ஓய்வூதியம் வந்திருக்கு, அலுவலகம் சென்று ஆர்டர் வாங்கனும். நகையோடு சென்றால் ஆர்டர் தரமாட்டங்க. என்னிடம் கொடுத்துட்டு போங்க என்று கூறி பல பேரிடம் நகையை அபேஸ் செய்த பெண்ணை காவலாளர்கள் கண்காணிப்பு கேமரா உதவியோடு கண்டுபிடித்து கைது செய்தனர்.
சாத்தூர் அருகிலுள்ள ஐயம்பட்டியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (56). இவரை கடந்த 14–ஆம் தேதி 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அணுகி, உங்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவு வந்துள்ளது, என்னுடன் தாலுகா அலுவலகத்திற்கு வாருங்கள் என்று அழைத்துச் சென்றுள்ளார். அவரது பேச்சை நம்பி சீதாலட்சுமியும் ஒரு ஆட்டோவில் சாத்தூர் வந்துள்ளார். பங்களா தெரு என்ற பகுதிக்கு வந்ததும் ஆட்டோவை விட்டு இருவரும் இறங்கியுள்ளனர். அங்குள்ள ஒரு வீட்டினை அடையாளம் காட்டி அங்குள்ள அலுவலகத்திற்குச் சென்று உதவித் தொகைக்கு அனுமதி கடிதம் வாங்க வேண்டும் என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.
மேலும், நகை அணிந்து சென்றால் தொகை கிடைக்காது என்று கூறி சீதாலட்சுமி அணிந்திருந்த மூன்று பவுன் நகைகையை என்னிடம் கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என்று நகையை வாங்கியுள்ளார். பின்னர், வீட்டினுள் நீண்ட நேரம் காத்திருந்தும் யாரும் வாராத நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது அந்த பெண் அங்கு இல்லை.
நகையை கொள்ளையடிக்க இப்படி ஒரு நாடகம் போடப்பட்டு இருப்பது அறிந்த சீதாலட்சுமி சாத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்னர்.
இந்த நிலையில் கடந்த 30–ஆம் தேதி சாத்தூர் மேல காந்திநகரில் ஐயம்மாள் (55) என்பவரிடமும் இதே நாடகத்தை அரங்கேற்றி இரண்டு பவுன் நகை திருடப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து நைசாக பேசி அழைத்துச் சென்ற பெண், நகை கிடைத்ததும் நழுவி விட்டார். இந்த புகாரும் சாத்தூர் காவல் நிலையத்திற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து நகரில் ஆங்காங்கே வைத்துள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை காவலாளர்கள் பார்வையிட்டனர். அப்போது சீதாலட்சுமியை பங்களா தெரு பகுதிக்கு அழைத்துச்சென்ற பெண்ணின் உருவம் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைக் கொண்டு விசாரணை மேற்கொண்டபோது அந்தப்பெண் நெல்லை மாவட்டம் தாழையூத்து வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே குடியிருக்கும் செல்வராஜ் என்பவரது மனைவி பாப்பாத்தி (53) என்பது தெரிந்தது.
காவலாளர்கள் அங்கு விரைந்துச் சென்று அந்த பெண்ணை கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், “ஐயம்மாளிடம் நகை திருடியதை அவர் ஒப்புக் கொண்டார். இதேபோல பல இடங்களில் தனது கைவரிசையை காட்டி இருப்பதும் ஒப்புக் கொண்டார்.
பின்னர், பாப்பாத்தி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.