
கோவையில், நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து போன் செய்து, பெண் காவலாளரிடம் ஆபாசமாக பேசியவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், சினிமாவில் வருவதுபோல ஜாலிக்கு பண்ணேன் என்று வாக்குமூலம் கொடுத்தார்.
கோவை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இருக்கும் கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்படும். இந்த கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் ஒருவர் போன் செய்து, பெண் காவலாளரிடம் ஆபாசமாக பேசியும், தொந்தரவு செய்தும் வந்துள்ளார். காவலாளர்கள், அவரை பலமுறை எச்சரித்தும் தனது லீலைகளை தொடர்ந்துள்ளார்.
அந்த மர்ம நபர் தொடர்ந்து 20 முறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பெண் காவலாளரிடம் ஆபாசமாக பேசி இருக்கிறார். கடுப்பான காவல்துறையினர், அந்த நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
அந்த நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து கண்காணித்ததில் கோவை மாவட்டம், செல்வபுரம் பகுதியில் இருந்து பேசுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இடம் தான் தெரிந்துவிட்டதே இனி சும்மா விடுவார்களா நம்ம காவல்துறை. சட்டம் தன் கடமையைச் செய்ய செல்வபுரம் காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் தலைமையில் காவலாளர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியில் உள்ள வீட்டில் இருந்த சுப்பிரமணி (28) என்பவரை கைது செய்தனர். இவர் நகை செய்யும் தொழிலாளி.
மாட்டியவரை அடித்து வெளுத்து விசாரித்தபோது அவர் சொன்ன பதில் இன்னும் கடுப்பை ஏற்றியிருக்கும்.
அவர் கூறியது, “சினிமா படங்களில் வருவதுபோல், ஜாலிக்காக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பேசினேன்” என்றார்.
பின்னர், சுப்பிரமணி மீது அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்து இடையூறு செய்வது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவலாளர்கள் அவரை சிறையில் அடைத்தனர்.