
கோவையில், கோதவாடி குளத்தில் வண்டல் மண் எடுத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து சுற்று வட்டார கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்படும் எனவே மண் எடுக்க கூடாது என்று கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ளது குருநல்லிபாளையம். இங்கு 140 ஏக்கர் பரப்பளவில் கோதவாடி குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் 320 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இங்கு மழைநீர் தேங்கினால் அருகிலுள்ள குருநல்லிபாளையம், கோதவாடி, செட்டியக்காபாளையம், ஆண்டிபாளையம் உள்பட பல்வேறு கிராமங்களில் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். விவசாய தேவைக்கும், குடிநீருக்கும் தாராளமாக தண்ணீர் கிடைக்கும்.
கடந்த சில வருடங்களாக போதுமான அளவு மழை பெய்யாததால் கோதவாடி குளத்திற்கு சரிவர தண்ணீர்வரத்து இன்றி குளம் வறண்டது. மேலும், புதர்மண்டியதுடன், சீமைக்கருவேல மரங்களும் அதிகமாக வளர்ந்துள்ளன. இதனால் இந்த பகுதியில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோதவாடி குளத்தை பாதுகாக்க பொதுப்பணித் துறையினர் கடந்த 2014–ஆம் ஆண்டு பி.ஏ.பி. கால்வாய் மூலம் தண்ணீரைக் கொண்டு வந்தனர். இதனால் குளத்தில் சிறிதளவு தண்ணீர் தேங்கியது.
இந்த நிலையில் கடந்த மாதம் 19–ஆம் தேதி தமிழக அரசு குடிமராமத்து பணியின் கீழ் கோதவாடி குளத்திற்குள் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, குளத்தின் ஒரு பகுதியை தூர்வாரி அங்கு இருக்கும் வண்டல் மண்ணை விவசாய பணிகளை மேற்கொள்ளும் வகையில், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்தது. இதற்கான வேளைகளும் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.
இதனிடையே குருநல்லிபாளையம் கிராம மக்கள் கோதவாடி குளத்தில் வண்டல் மண் எடுக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் குளத்தில் மண் அள்ளும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
இது குறித்து அந்த பகுதி மக்கள் முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், பொள்ளாச்சி உதவி ஆட்சியர் ஆகியோருக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பினர்.
அந்த மனுவில், “குருநல்லிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கோதவாடி குளத்தில் ஏற்கனவே வண்டல் மண் எடுத்து பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. மீண்டும் மண் எடுப்பதால் சுற்று வட்டார கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வறட்சியான சூழ்நிலை உருவாகும்.
இதனால், கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி கோதவாடி குளத்தில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த முடிவு செய்து, தற்போது பணியை நிறுத்தி உள்ளோம்.
எனவே கோதவாடி குளத்தில் மண் எடுக்க அனுமதி அளிக்க கூடாது. எங்களது கோரிக்கைக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.