ஜேஇஇ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்ணை சமர்ப்பிப்பதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
ஐஐடி, எம்ஐடி உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 2023 - 24ம் கல்வியாண்டில் ஐஐடி உள்ளிட்ட நிறுவனங்களில் இணைந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வருகின்ற ஜனவரி மாதம் பிரதானத் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. மேலும் மாணவர்களுக்கான விண்ணப்பத்தில் தங்களது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்ணையும் மாணவர்கள் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு..! சிகிச்சைக்காக நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி
தற்போதைய கல்வியாண்டில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் தங்களது 10ம் வகுப்பை 2020 - 21 கல்வியாண்டில் நிறைவு செய்திருப்பர். 2020 - 21 கல்வியாண்டில் நாடு முழுவதும் கொரோனா உச்ச நிலையை அடைந்திருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இல்லாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு மதிப்பெண் சான்றும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தமிழக மாணவர்கள் தங்கள் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை வழங்க முடியாமல் தவித்து வந்தனர். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுதப்பட்டது. மேலும் தமிழகத்தைச் சோ்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும் இது தொடர்பாக கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக மாணவர்களுக்கு மட்டும் 10ம் வகுப்பு மதிப்பெண் கோரும் பகுதி செயலிழப்பு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஆண்டு 2021 எனவும், தமிழக பள்ளிக் கல்வி முறையில் பயின்றதாகவும் குறிப்பிடும் மாணவர்களுக்கு மதிப்பெண்ணுக்கான பகுதி தானாகவே மறையும்” வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.