முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான ஜேசிடி பிரபாகர், புகழேந்தி ஆகியோர் பன்னீர்செல்வத்தின் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றதும் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கினார். பின்னர் பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பை நீக்கிவிட்டு ஓ.பன்னீர்செல்வத்தையும் வெளியேற்றினார்.
இதனிடையே கட்சியில் அவ்வபோது பழனிசாமியின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் மூத்த நிர்வாகிகள் பலரையும் கட்சியில் இருந்து ஓரம் கட்ட ஆரம்பித்தார். இதன் விளைவாக டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற குழுவை நடத்தி வருகிறார். மேலும் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறி வருகிறார்.
undefined
தென்காசியில் காவல்நிலைய எழுத்தர் வெட்டி படுகொலை; சினிமா பாணியில் நடைபெற்ற கொலையால் பொதுமக்கள் அச்சம்
ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் பயணித்து வந்த ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி இருவரும் அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் கேசி பழனிசாமியோடு கூட்டாக இணைந்து இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது புகழேந்தியும், பிரபாகரனும் கூறுகையில், நாங்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் இருந்து வெளியேறுகிறோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் அதிமுக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கோரி வந்தோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. இதன் பின்னரும் மேலும் ஒரு தோல்வியை சந்திக்க அதிமுக தொண்டர்கள் தயாராக இல்லை. அதனால் நாங்கள் “அதிமுக ஒருங்கிணைப்பு குழு” என்ற புதிய அமைப்பை தொடங்கி உள்ளோம். நாங்கள் மூவரும் பழனிசாமி, சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து அதிமுக.வை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்துள்ளனர். மேலும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேறு பாதையில் பயணித்து வருவதாகவும், அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லாததால் அதில் இருந்து வெளியேறி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.