உலக மகா பொய்யை மக்கள் மத்தியில் பரப்பும் முதல்வர் ஸ்டாலின்! அம்பலப்படுத்தும் டிடிவி. தினகரன்!

Published : Apr 25, 2025, 11:54 AM IST
 உலக மகா பொய்யை மக்கள் மத்தியில் பரப்பும் முதல்வர் ஸ்டாலின்! அம்பலப்படுத்தும் டிடிவி. தினகரன்!

சுருக்கம்

என்.எல்.சி நிறுவனப் பங்கு விற்பனையைத் தடுத்த பெருமை ஜெயலலிதாவையே சாரும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை தடுத்து நிறுத்திய பெருமை ஜெயலலிதாதாவை சாரும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், மத்திய அரசு என்.எல்.சி பங்குகளை விற்று தனியார் மயத்தை புகுத்த முயற்சித்த நேரத்தில் திமுக எடுத்த நடவடிக்கையால் அது தடுத்து நிறுத்தப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் அறிக்கையின் மூலம் உலக மகா பொய்யை மக்கள் மத்தியில் பரப்ப முயற்சி செய்திருக்கிறார். 

என்.எல்.சி நிறுவனம்

இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதோடு, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக எரிசக்தித் துறையில் அளப்பரிய சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கும் என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை கடந்த 2013 ஆம் ஆண்டு தனியாருக்கு விற்பனை செய்ய முன்வந்த அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளை  தடுத்து நிறுத்திய பெருமைக்குரியவர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மட்டுமே என்பதை அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளர்களும் நன்கு அறிவர்.  

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல்

தமிழக மக்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்திட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை 2013 ஆம் ஆண்டு தனியாருக்கு விற்பனை செய்ய முன்வந்த போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்து கள்ள மவுனம் காத்த திமுக, தற்போது அதனை தடுத்து நிறுத்தியது நாங்கள் தான் என தம்பட்டம் அடிப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்.  

 துணிச்சலான நடவடிக்கையால் தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா

2013 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது மட்டுமல்ல, அதற்கு முன்பாக 2003, 2006 காலகட்டங்களிலும் என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முயன்ற போதெல்லாம் தன்னுடைய துணிச்சலான நடவடிக்கைகளால் அவற்றை தடுத்து நிறுத்தியதோடு, என்.எல்.சி யின் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் வாங்கிய பெருமை புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சாரும் என்பதை எவராலும் மறுக்க முடியாது.  எனவே, தான் செய்த துரோகங்களை மறைக்க வரலாற்றை மாற்றித் திரிக்க பார்க்கும் திமுகவிற்கு இன்று நடைபெறும் என்.எல்.சி சங்க அங்கீகார தேர்தலில் அந்நிறுவன தொழிலாளர்கள் மட்டுமல்லாது அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!