
நாட்டு மக்களின் வேண்டுதல்களுக்கும், பிரார்த்தனைக்கும் கிடைத்த பலனாக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. கூறினார்.
முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் இடைவிடாமல் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையொட்டி அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண குணமடைய வேண்டி, அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என தினமும் லட்சக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் உள்ள பல கோயில்களில் யாகம், பூஜை, தேர் இழுத்தல், அலகு குத்துதல் உள்பட பல்வேறு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.
மேலும் முதலமைச்சர், பல்வேறு கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், சினிமா நட்சத்திரங்களும், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, அவரது உடல்குறித்து விசாரித்து செல்கின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சி.ராமநாதன், இந்துஸ்தான் வர்த்தக சபை தலைவர் எம்.ரசாக் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேற்று சென்றனர்.
அங்கு, அமைச்சர்கள் மற்றும் டாக்டர்களிடம் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரித்தனர். பின்னர் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசினேன். முதலமைச்சர் ஜெயலலிதா மிக விரைவாக பூரண குணமடைந்து வருகிறார். விரைவில் வீடு திரும்பி அரசு மற்றும் நிர்வாக பணியை மிக வேகமாக தொடருவார் என்ற நல்ல செய்தியை கூறினார்கள்.
நாட்டு மக்களின் வேண்டுதல்களுக்கும், பிரார்த்தனைக்கும் கிடைத்த பலனாக ஜெயலலிதா நெருக்கடியான, கடினமான நிலையில் இருந்து மீண்டு மிக வலிமையாக மக்களுடைய ஆதரவோடு முழுமையான குணமடைந்து இன்னும் பல ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்களுடைய நலனுக்காக நலத்திட்டங்களை தந்து அரசு நிர்வாகத்தை நடத்துவார். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் சார்பில் அவர் பரிபூரண குணமடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.