
சென்னையில் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்திவருகின்றனர்.
நாடுமுழுதும் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் பிரதமர். இந்த விவகாரத்தால் கருப்பு பணம் ஒழியும் என கூறப்பட்டது. மேலும் கள்ள நோட்டுகள் ஒழியும் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தினமும் வங்கிகள் ., ஏடிஎம்களின் வாசலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று திடீரென பாரிமுனையில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் , ஹவாலா பரிமாற்றத்தில் தொடர்புடையவர்கள் என 8 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சாதாரணமாக 4ஆயிரம் 5 ஆயிரம் என்று மட்டுமே பொதுமக்கள் பணத்தை டெபாசிட் செய்கின்றனர். அதிகபட்டசமாக 2 லட்சத்துக்குள் டெபாசிட் செய்தால் பெரிய விஷயமாக உள்ளது. இந்நிலையில் அதிக அளவில் பணப்படிமாற்றத்தில் ஈடுபடும் ஹவாலா பேர்வழிகள் பணத்தை பறிமுதல் செய்ய வருமான வரித்துறையினர் திட்டமிட்டு இன்று ரெய்டு நடத்தியுள்ளனர்.
சென்னையில் ஹவாலா பரிமாற்றமும் நகைக்கடை தொழிலும் ஒன்றுக்கொன்று பின்னி பிணைந்தது. அந்த வகையில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள வால்டாக்ஸ் சாலை , என்.எஸ்.சி போஸ் சாலை , பாரிமுனை பகுதிகள் ஹவாலா வர்த்தகத்துக்கும், கிரிக்கெட் சூதாட்டத்திற்கும் பெயர் பெற்றவை.
ஆகவே செல்லாத நோட்டுகள் அறிவிப்பை ஒட்டி ஹவாலா பேர்வழிகள் கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருவார்கள் என்பதால் இந்த ரெய்டு என்று கூறப்படுகிறது. யாரிடம் ரெய்டு , எவ்வளவு பணம் சிக்கியது எனபதெல்லாம் பின்னர் தெரிய வரும்.