
இயல்பாக மூச்சு விடுவதால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று வெகு நேரம் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டிருந்தது.
முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் இடைவிடாமல் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையொட்டி அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண குணமடைய வேண்டி, அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என தினமும் லட்சக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் உள்ள பல கோயில்களில் யாகம், பூஜை, தேர் இழுத்தல், அலகு குத்துதல் உள்பட பல்வேறு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.
மேலும் முதலமைச்சர், பல்வேறு கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், சினிமா நட்சத்திரங்களும், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, அவரது உடல்குறித்து விசாரித்து செல்கின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று நீண்ட நேரம் ஜெயலலிதா நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது, ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை மூலம் அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் இல்லாமலேயே, தொடர்ந்து சுமார் 14 மணி நேரம் இயல்பாக சுவாசித்தார். இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது.
அதிகாலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து வெகு நேரம் அவர் இயல்பாகவே மூச்சு விட்டார். நீண்ட நேரம் நாற்காலியிலும் அமர்ந்திருந்தார். எனவே, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.