
முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம்பெறுவார் என குடியரசுத்தலைவர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை ஜெயலலிதாவுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. சிறு அறுவை சிகிச்சை சற்று முன் முடிந்தது.
முதல்வரின் உடலில் ஏற்படும் எதிர்வினையைப்பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதயநாளத்தில் உள்ள அடைப்பை அறுவை சிகிச்சையின்றி சரிசெய்யக்கூடியது ஆஞ்ஜியோ ஆகும்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்ட சற்று நேரத்தில், அனைத்து ஊடகங்களிலும் வெளியானதால், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை முன் திரண்டுள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெறுவார் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, தனது டுவிட்டர் பக்கத்தில், முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டுள்ளார்.
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, முதல்வர் ஜெயலலிதா, பூரண நலம்பெற்று பணியைத் தொடர வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, ஜெயலலிதா விரைந்து நலம்பெறுவார் என தாம் நம்புவதாக தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி, விரைவில் நலம்பெற்று பணியைத் தொடர கடவுளிடம் பிரார்த்திப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ் ராஜ்சிங் சவுகான், தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சீரடைந்து மக்கள் பணியாற்ற விரும்புவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று மகாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கர்நாடக முதல்வர் சித்தராமையா, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், சரத்குமார், கேரள கவர்னர் சதாசிவம், புதுச்சேரி துணை கவர்னர் கிரண்பேடி ஆகியோரும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம்பெறுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.