
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையொட்டி அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்கள், வழிபாட்டு தலங்களில் பரிகாரம், பூஜை, யாகம், அலகு குத்துதல் உள்பட பல்வேறு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க, மதுரை ஆதீனம் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இன்றைய தினம் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, டாக்டர்களிடம் பேசி கொண்டிருந்தபோது, மிகச்சில நாட்களிலேயே இன்னும் சொல்லப்போனால் 10 நாட்களில் ஜெயலலிதா போயஸ் தோட்டத்துக்கு திரும்பிவிடலாம் என்ற நல்ல செய்தியை நமக்கு தந்து இருக்கிறார்கள்.
எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்தி. மீண்டும் ஜெயலலிதா முழு உடல்நலம் பெற்று நல்ல ஆட்சியை நம் மக்களுக்கான நல்ல பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவார் என்பதிலே எந்த விதமான ஐயமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.