ஜெ.யின் கடைசி திட்டம்…!! கால்நடை திட்டம்…!! நெகிழ்ச்சியுடன் வரவேற்கும் கிராம மக்கள்

First Published Dec 23, 2016, 11:33 AM IST
Highlights


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடைசியாக தொடங்கி வைத்த கால் நடைகளுக்கான நலத்திட்டத்துக்கு கிராமங்கள் மத்தியில் அமோக ஆதரவு பெருகி வருகிறது. சோதனை முயற்சியாக தொடங்கப்பட்ட அந்த திட்டத்தை மாநிலம்முழுவதும் விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 22-ந்தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு ஒரு நாள் முன்னதாக காணொலி காட்சி மூலம், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் திட்டத்தையும், அதற்கான எண் “1962” என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார்.

இந்த திட்டத்தில் ஆடு , மாடுகள் ஏதாவது விபத்தில் சிக்கிக் கொண்டாலோ, அல்லது பராமரிப்பின்றி இருந்தாலோ அந்த இலவச தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், ஆடு, மாடுகளை ஏற்றிச் செல்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வரும். அந்த வாகனத்தில் அவை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, பாதுகாக்கப்படும்.

மனிதர்கள் விபத்தில் சிக்கிக்கொண்டாலோ, அவசர நேரத்திலோ தொடர்பு கொள்ள 108  எண் இருப்பது போல், கால்நடைகளுக்கு கொண்டு வர இந்த திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இந்த திட்டம் செப்டம்பர் 21-ந்தேதி முதல்வர் ஜெயலலிதாவால், சோதனை அடிப்படையில், திருச்சி, தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்துக்கு இரு ஆம்புலன்சுகள் மொத்தம் ரூ.6.33 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது. தேசிய வேளாண்மை ேமம்பாட்டு திட்டத்தின் மாவட்டத்துக்கு இரு கால்நடைகளுக்கான ஆம்புலென்சுகள் வழங்கப்பட்டன. இந்த ஆம்புலென்சுக்கு தேவையான மருத்துவவசதிகள், டாக்டர்கள் ஆகியவற்றை கால்நடைபல்கலைக்கழகம் மற்றும் ஆய்வு மையம் சார்பில் மேற்பார்வை செய்யப்பட்டு, உதவிகள் செய்யப்பட்டன. இந்த ஆம்புலன்ஸ் ஒவ்வொன்றிலும்  ஒரு டிரைவர், ஒரு மருத்துவர்,  ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த திட்டம் தொடங்கப்பட்டு இன்றோடு 3 மாதம் நிறைவடைந்தது. இந்த 90 நாட்களில் சோதனை திட்டமாக தொடங்கப்பட்ட இந்த மாவட்டங்களில் இதுவரை 1500 ஆடுகள்,150 பசு மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், பிரசவநேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிர் காக்கப்பட்டுள்ளது. 12 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன.

கிராமங்களில் இருக்கும் ஏழை மக்கள் வீடுகளில் இருக்கும் ஆடுகள், மாடுகளுக்கு திடீரென ஏற்படும் உடல் நலக்குறைவால், சில நேரங்களில் இறப்பை சந்திக்கின்றன. ஆனால், இந்த ஆம்புலன்ஸ் திட்டத்தால் ஏராளமான கால்நடைகள் உயிர்காக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கால்நடைபல்கலைக்கழகம் மற்றும் ஆய்வு மையம் பேராசரியர் பி.என். ரிச்சர்டுஜெகதீசன் கூறுகையில், “ கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள், விபத்துக்கள், விஷ செடிகளை தின்பதால் ஏற்படும் பாதிப்புகள், பிரசவ நேரம் ஆகியவற்றில் இருந்து காப்பதற்காக இந்த திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இந்த ஆம்புலென்சில் இரு ஹைட்ராலிக் லிப்டுகள் இருப்பதால், கால்நடைகளை தூக்க சிரமப்படத் தேவையில்லை. அவை எளிதாக வாகனத்தில் ஏற்ற முடியும். கால்நடைகளுக்கு தேவையான ஆக்சிஜன், அவசர மருத்துவக் கருவிகள், ஸ்கேனிங் மெஷின், மருந்துகள் போதமான அளவில் இருக்கும். இந்த ஆம்புலென்சுகள் வந்தபின், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம், முசிறி, லால்குடி உள்ளிட்ட பகுதிகளி்ல இருந்து ஏராளமான அழைப்புகள் வந்துள்ளன. ஏராளமான கால்நடைகளை கால்நடைகளை காப்பாற்றி  இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

click me!