
வறட்சி பாதித்த பகுதிகள், கணக்கெடுப்பு செய்யப்பட்டு இழப்பீடு வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தலைமையில் நேற்று நடைபெற்றது.
“பறக்கை பகுதியில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் பல இடங்களில் இதே நிலைதான் உள்ளது. எனவே இம்மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்” என பெரிய நாடார் (புல்லுவிளை) தெரிவித்தார்.
இதற்கு பல விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனர்.
மாவட்ட வேளாண் உற்பத்திக் குழு உறுப்பினர் செண்பகசேகரன் பிள்ளை, இம்மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மனு அளித்தார்.
இதற்கு பதிலளித்த ஆட்சியர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் சுழற்சி முறையில் நெல் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டு வறட்சி பாதித்த பகுதிகள், கணக்கெடுப்பு செய்யப்பட்டு இழப்பீடு வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றுத் தெரிவித்தார்.
தேரூர் உள்ளிட்ட சில பாசனக் குளங்களில் வனத்துறை தலையீட்டால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த கூட்டத்திலேயே தெரிவித்தோம். இருப்பினும் இக்கூட்டத்திற்கு வனத்துறையினர் வரவில்லை.
இதே போல் வருவாய்த்துறை ஆவணங்களில் கால்வாய் தொடர்பான விவரங்கள் விடுபட்டுள்ளன. அதை சரி செய்ய வேண்டும். அசல் ஆவணங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சர்வே துறையிடம் உள்ளது. கிராம அலுவலகங்களில் நகல் மட்டுமே உள்ளது. இதனால் எல்லைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இவற்றை கிராம அலுவலகங்களிலேயே திரும்ப அளிக்க வேண்டும். அப்போதுதான் அது விவசாயிகளுக்கு பயன்படும். என்று வின்ஸ் ஆன்றோ (பாசனத் துறை தலைவர்) தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் தொடர்ந்து பேசிய ஆட்சியர், “மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் வெளியிடப்பட்டுள்ள குளங்கள் தூர்வாரும் பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகின்றன. மேலும் பெருங்குளம் மாவட்ட சிறப்பு அரசிதழில் சேர்க்கப்பட்டு, அதன்பின் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். நெய்யூர் கால்வாய் வரும் கால்வாய் அடைப்பு காலத்தில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
முல்லையாற்றில் மடத்துவிளை தடுப்பணை உள்பாகம் ஓட்டைகளை கான்கிரீட் சுவர் அமைத்து, நீர் கசிவுகளை தடுக்க ரூ.1.70 இலட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதி ஆதாரத்தை பொருத்து முன்னுரிமை அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆலங்கால் ஓடையில் சேதமடைந்துள்ள தடுப்பணையை கட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. நீர்வரத்துக்காலை சரிசெய்யவும் மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. மதிப்பீடு ஒப்புதல் கிடைக்கப்பெற்ற பின்னர் மேற்படி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
தோவாளை கால்வாய் மூலமாக பாசனம் பெறும் செட்டிகுளம் மறுகால் ஓடையில் செடிகொடிகள் மற்றும் மண் மேடுகளை அகற்றி, கால்வாயை விரிவுபடுத்த ரூ. 2 இலட்சம் மதிப்பிடப்பட்டுள்ளது. துறையின் நிகழாண்டு பராமரிப்பு நிதி ஆதாரம் போதுமானதாக இல்லாததால் சிறப்பு நிதி ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில் முன்னுரிமையின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பறக்கை குளத்தின் உள்புறம் உள்ள செடி, கொடிகளை அகற்ற நீர் அடைப்பு காலமாகிய மார்ச் முதல் மே வரையுள்ள காலங்களில் அரசின் நிதிநிலைக்கேற்ப முன்னுரிமையின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று பேசினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.இளங்கோ, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நிஜாமுதீன், துணை இயக்குநர் சந்திரசேனன் நாயர், பொதுப்பணித் துறை (நீர் ஆதாரம்) செயற்பொறியாளர் சுப்பிரமணியன், வட்டாட்சியர்கள், செயல் அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.