
ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், அனைவரும் ஒற்றுமையாக இருப்பதையே விரும்புவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று மீன்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தொண்டர்களுடன் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வருகை தந்தார்.
அப்போது, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய ஜெயக்குமார், நினைவிடத்தை வலம் வந்து விழுந்து வணங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார். அனைவரும் ஒற்றுமையாக இருப்பதையே விரும்புவதாகவும் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில், மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு நலன் தரும் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறினார். மேலும், சட்டப்பேரவையில் இன்று அனைவருக்கும் மீன் உணவு வழங்க உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.