
அரசு பள்ளிகளில் புதிதாக 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்படும் எனவும் தனியார் பங்களிப்புடன் அரசு பள்ளிகளில் கழிப்பறை கட்ட தொழிலதிபர்களை சந்திக்க உள்ளதாகவும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற புதிய அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்ததால் அதில் தலையிட்டு பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர முன் நின்றார். ஆனால் அதில் எவ்வித பலனும் எட்டவில்லை.
பதிலுக்கு மக்களிடம் இருந்து அவப்பெயரே மிஞ்சியது. மேலும் ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டி அளிக்க முடியாமல் அங்கிருந்து சென்றார் செங்கொட்டையன்.
இதனால் வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். டிடிவியை ஒதுக்கி கட்சியில் இருந்து ஒதுக்குவதாக அறிவித்த பிறகே செங்கோட்டையன் அமைச்சர் பதவிக்கான வேலைபாடுகளில் முழு கவனத்துடன் ஈடுபட்டார்.
பள்ளிக்கல்வி துறை அமைப்பை முழுமையாக மாற்றம் செய்தார். இதனால் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளிகளில் புதிதாக 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்படும் எனவும் தனியார் பங்களிப்புடன் அரசு பள்ளிகளில் கழிப்பறை கட்ட தொழிலதிபர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சிதம்பரம் பரங்கிபேட்டையில் உள்ள பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.