
காஞ்சிபுரம்
வருவாய்த் துறையினரை தாக்கிய வழக்கறிஞர்களை கைது செய்ய வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் வருவாய்த் துறையினர் அலுவலகங்களுக்கு பூட்டு போட்டுவிட்டு போராட்டத்திற்கு சென்றதால் மனுக்களை கொடுக்கவந்த மக்கள் காரணம் தெரியாமல் அவதிக்கு உள்ளாகினர்.
திருபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை வருவாய்த் துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
இதனையடுத்து வருவாய்த்துறையினரைத் தாக்கிய வழக்கறிஞர்களை கைது செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்த் துறையினர் நேற்று பணிகளைப் புறக்கணித்தும், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு பூட்டு போட்டுவிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள திருபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய்த்துறையினர் அனைவரும் சென்று விட்டதால் பல்வேறு கோரிக்கைகளுக்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அதேபோன்று செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகமும் நேற்று மூடிக்கிடந்ததால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
செங்கல்பட்டு வட்டத்துக்கு உள்பட்ட செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள்கோவில் , மறைலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் வரை உள்வட்டம் உள்ளது. இரு நகராட்சிகள், ஒரு பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என செங்கல்பட்டு தாலுகாவில் உள்ளன.
வழக்கம் போல் திங்கள்கிழமை செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் மனுக்களுடன வந்தனர். ஆனால் வட்டாட்சியர் அலுவலகம் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வட்டாட்சியர் அலுவலகம் பூட்டுப்போட்டு பூட்டப்பட்டிருந்தது கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.
இதேபோன்று செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகத்திலும் சார் ஆட்சியர் உதவியாளர் உள்ளிட்ட பணியாளர்கள் யாரும் வரவில்லை.
திருபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த வழக்கறிஞர்கள் வட்டாட்சியர் ஏழுமலை, துணை வட்டாட்சியர் பூபதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரை தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
வருவாய்த் துறையினருக்கு பாதுகாப்பில்லாத அவல நிலையைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெறுவதால் முழுவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.
பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டால் தான் போராட்டம் கைவிடப்படும். இல்லை என்றால் நாளையும் (செவ்வாய்க்கிழமை) தொடர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
அவதிக்குள்ளாகிய மக்கள் கூறியது: பணத்தையும், நேரத்தையும் செலவழித்து எங்கள் குறைகளை கூறி மனு கொடுக்க வந்தால் ஒரு அறிவிப்புப் பலகைகூட இல்லாமல் நீண்டநேரம் காத்துக் கிடந்து பயனற்று செல்கிறோம்” என்று தெரிவித்தனர்.