
கரூர்
கரூர் போக்குவரத்து மண்டல நிர்வாகம் ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் முழு நேர பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர்களை ஓய்வின்றித் தொடர்ந்து பணியாற்ற வலியுறுத்துகிறது என்றும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் முறையிட்டனர்.
ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் கரூர் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
இதில், திருமாநிலையூர் போக்குவரத்து கிளையைச் சேர்ந்த சி.ஐ.டி.யூ. போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “கரூர் போக்குவரத்து மண்டல நிர்வாகம் ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் திருச்சியில் இருந்து குளித்தலை, முசிறி ஆகிய ஊர்களுக்கு முழு நேர பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர்களை கோவை மற்றும் திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு ஓய்வின்றித் தொடர்ந்து பணியாற்ற கூறுகின்றனர்.
ஓய்வின்றி பணியாற்றினால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஓய்வின்றி தொடர் பணி வழங்க கூடாது என நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது. இதனை மதிக்காமல் தொடர்ந்து பணி வழங்கி வருகின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் தெரிவித்திருந்தனர்.
தண்ணீர் பந்தல்புதூர், ஆலாம்பாளையம், குட்டக்கடை, செங்காட்டனூர், வடமலைக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் சார்பில் கொடுத்த மனு:
”தண்ணீர்பந்தல் பகுதியில் தனியார் சாயப்பட்டறை நிறுவனம் சாயக்கழிவுகளை ஆழ்துளை கிணறு மூலம் நிலத்தடியில் இறக்குகின்றனர், அதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடுகிறது, அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாசடைந்த தண்ணீரை பாட்டிலில் பிடித்து வந்திருந்தனர் அத்தாச்சியுடன் தெரிவித்தனர்.
இதேபோல மக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கொடுத்தனர். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக 18 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாகளையும், ஆற்றில் மூழ்கி இறந்தவரின் வாரிசு தாரருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினையும் ஆட்சியர் கோவிந்தராஜ் வழங்கினார்.