2019 தேர்தல் 2021 தேர்தலில் பா ஜா க உடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுகவும், தானும் தோல்வி அடைந்ததாகவும், சனியன் விட்டது என பா ஜா கவை கழற்றி விட்டுவிட்ட பிறகு தான் அதிமுக தொண்டர்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக- பாஜக மோதல்
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. அதிமுக- பாஜக கூட்டணி முறிந்த நிலையில், இரண்டு கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை எதிர்கொள்கிறது. இந்தநிலையில் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தோல்விக்கு காரணம் யார் என இரண்டு தரப்பிலும் மோதி வருகின்றனர். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும் போது,
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் அதிமுக அழிந்து விடும் என விமர்சித்து இருந்தார். மேலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் தான் தமிழகத்தில் பாஜக தேர்தலில் தோல்வி அடைந்ததாக தெரிவித்தார். இந்த கருத்து அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது,
கத்துக்குட்டி அண்ணாமலை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கூட முடியவில்லை எனவும் நேற்று வந்த அரசியல் கத்துக்குடியால் அழித்துவிட முடியுமா என கேள்வி எழுப்பினார். அண்ணாமலை தான் பிரபலம் அடைய, என்றுமே பேசு பொருளாக இருக்க வேண்டும் என அடிப்படை அரசியல் அறிவு இல்லாமல் பேசி வருவதாக கூறிய அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பா ஜ க முதலில் இருக்குமா என்பதை பார்க்க வேண்டும் என கூறினார். 2019 தேர்தல் 2021 தேர்தலில் பா ஜா க உடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுகவும், தானும் தோல்வி அடைந்ததாகவும், சனியன் விட்டது என பா ஜா கவை கழற்றி விட்டுவிட்ட பிறகு தான் அதிமுக தொண்டர்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என தெரிவித்தார்.
தேர்தலில் பதிலடி கொடுப்போம்
அதிமுகவில் இருவேறு சமூகத்தினரிடையே மோதல் இருந்து வருவதாக அண்ணாமலை தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி அடைய போவதை உணர்ந்து, கட்சிக்குள் பிரித்தாளும் சூழ்ச்சியை அண்ணாமலை கையாள்கிறார். இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம் எந்த பிரச்சனையும் இல்லை. இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அதிமுகவில் பிளவு ஏற்படுத்த நயவஞ்சக எண்ணத்துடன் அண்ணாமலை இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு தேர்தல் வெற்றி மூலம் பதிலடி கொடுப்போம் என ஜெயக்குமார்தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்