
Kabaddi player Karthika prize money : பஹ்ரைனில் நடைபெற்றஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதிப் போட்டியில் ஈரானை 75-21 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தித் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்து அணி வெற்றி பெற முக்கியப் பங்காற்றியவர் சென்னையின் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் கார்த்திகா, அவரை நேரில் அழைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இந்த நிலையில் கார்த்திகாவிற்கு வழங்கப்பட்டுள்ள 25 லட்சம் ரூபாய் பரிசு தொகை போதாது எனவும் கூடுதல் பரிசு தொகை அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள பதிவில், உங்க அப்பா வீட்டு பணமா மு.க.ஸ்டாலின்.? ஆசியா இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.25 லட்சம் மட்டும் அறிவித்து அநீதி இழைத்துள்ளது திமுக அரசு. கண்ணகி நகர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பகுதியில் இருந்து,சரியான மைதானம் முதல் உடலுக்கான ஊட்டச்சத்து வரை என எல்லா கஷ்டங்களையும் கடந்து கார்த்திகா வெற்றி பெற்றுள்ளார். எனவே தமிழ்நாட்டை சேர்ந்த இரு வீரரக்ளுக்கும் தற்போது வழங்கியுள்ள ஊக்கத்தொகையை தலா ரூ.1 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும்.
தான் கண்ட கனவை கார்த்திகா போன்ற எளிய பிள்ளைகளின் மூலம் நிறைவேற்றி வெற்றிக்கு முதற்காரணமாக இருந்துள்ள கண்ணகி நகர் அணியின் பயிற்சியாளர் ராஜி அவர்களுக்கு ஊக்கத்தொகையும-அரசுப்பணியும் வழங்கி அரசு கவுரவிக்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகிறேன். கண்ணகி நகர் போன்ற பகுதிகளில்,அன்றாட வேலைக்கு அலையும் மக்களாக அடுத்த தலைமுறை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எல்லோரது விருப்பம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.