Jawad cyclone : ”ஜாவத் புயல்”-தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

By Thanalakshmi VFirst Published Dec 3, 2021, 5:32 PM IST
Highlights

வட மேற்கு வங்ககடலில் நிலைக்கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக மாறியுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அந்தமான் அருகே நிலைகொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த புயலுக்கு ஜாவத் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜாவத் புயல் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளதாகவும், டிசம்பர் 5 ஆம் தேதி வடக்கு ஆந்திரா - ஒடிசா இடையே கரையைக் கடக்கும் எனவும், நாளை காலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோர பகுதியை  நெருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் புயலால் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையின் 64 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் நாளை, மத்திய வங்க கடல் பகுதி, ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 80 கி.மீ முதல் 90 கி.மீ வரை வீசக்கூடும் எனவும் அவ்வப்போது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் எனவும், கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஜாவத் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி ஏற்கனவே ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் , வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

மேலும் வரும் ஞாயிறன்று, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும், தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் , புதுச்சேரி பகுதிகளில் லேசான மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

click me!