
அதிமுக பொது செயலாளராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு நேற்று முன்தினம் விடை காணப்பட்டுவிட்டது. கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் முழுமையான ஆதரவு சின்னம்மா சசிகலாவுக்கு கிடைத்துள்ளது. ஆனால், தொண்டர்கள் மட்டத்திலோ, தொடர்ந்து ஆங்காங்கே எதிர்ப்பு குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் நேற்று பூந்தமல்லியை சேர்ந்த அதிமுக நிர்வாக்கள் மற்றும் தொண்டர்கள், சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வசிக்கும் தி.நகர் இல்லத்துக்கு சென்றனர்.
அங்கு பல மணிநேரம் காத்திருந்தும், தீபா வெளியே வராததால், பூந்தமல்லி தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆனால், கேகே நகரை சேர்ந்த தொண்டர்கள் மட்டும், அங்கேயே காத்திருந்தனர். சில மணி நேரங்களுக்கு பின் தீபா வெளியே வந்தார். அப்போது, ஆரவார குரல் எழுப்பிய தனது ஆதரவார்கள் இடையே ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசினார்.
“பொறுமையாக என் வேலையை செய்ய விடுங்கள். தேவையான நேரத்தில் நல்ல முடிவை எடுப்பேன். ஜனவரி 2ம் தேதிக்கு மேல் நீங்கள் எதிர் பார்க்கலாம்” என்று மட்டும் கூறிவிட்டு, வந்திருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்து உள்ளே சென்றார்.
தீபா ஆதரவாளர்கள் என்பதை விட, சின்னம்மா சசிகலாவுக்கு எதிர்ப்பாளர்களாக தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு தீபா தெம்பை கொடுப்பாரா அல்லது வந்த வழியே ஜெகா வாங்கி விடுவாரா என்பது 2 நாட்களில் தெரிந்துவிடும்.