
சல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று போராடிய மாணவர்களுக்கும், நிரந்தர சட்டம் இயற்றிய தமிழக அரசிற்கும் நன்றித் தெரிவிக்கும் விதமாக கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்குமான பயிற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சல்லிக்கட்டுக்காக அறவழியில் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கும், அதன் மூலம் சல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் இயற்றிய தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், திண்டுக்கல் அடுத்துள்ள பில்லமநாயக்கன்பட்டி அருள்மிகு கதிர் நரசிங்கப் பெருமாள் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்த வழிப்பாட்டிற்கு 10-க்கும் மேற்பட்ட சல்லிக்கட்டுக் காளைகள் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு, சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
பின்னர், பொதுமக்களும், மாடுபிடி வீரர்களும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதுகுறித்து சல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலர் பி.ஏ. சின்னையா கூறியது:
“தமிழர்களின் வீர விளையாட்டுக்கான தடை நீங்குவதற்கு முழு முதல் காரணமாக இருந்த மாணவர்களுக்கும், துணையாக நின்ற மக்களுக்கும், நிரந்தரச் சட்டம் இயற்றிய தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
கதிர் நரசிங்கப் பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பிப்ரவரி 22-ஆம் தேதி பில்லமநாயக்கன்பட்டி சல்லிக்கட்டு விழா நடைபெறும் என்றார்.
பிப்ரவரி 10-ஆம் தேதி கொசவப்பட்டியிலும், பிப்ரவரி 15-ஆம் தேதி புகையிலைப்பட்டியிலும் சல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை அப்பகுதியைச் சேர்ந்த விழாக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நத்தமாடிப்பட்டி, வெள்ளோடு, குட்டத்து ஆவரம்பட்டி, மறவப்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் அந்தந்தப் பகுதியில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு, சல்லிக்கட்டு நடத்துவதற்கான முயற்சியில் விழாக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சல்லிக்கட்டுக்கான தடை நீங்கியுள்ளதை அடுத்து, காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வாடிவாசல் செல்லும் மாடுபிடி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
வறட்சியின் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததால், காளைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.