
திண்டுக்கல்லில் தனியார் நிறுவனத்தின் சார்பில் கேபிள் பதிப்பதற்காக குழிகள் தோண்டியதால், பிஎஸ்என்எல் சேவை நான்கு நாள்களாக முடங்கியுள்ளது.
திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி பகுதியில், தனியார் செல்லிடப்பேசி நிறுவனத்தின் சார்பில் கேபிள் பதிப்பதற்காக நான்கு நாள்களுக்கு முன்பு குழிகள் தோண்டப்பட்டன.
அப்போது, செட்டிநாயக்கன்பட்டிக்குச் செல்லும் பிஎஸ்என்எல் இணைப்புகள்ம் சேர்ந்து துண்டிக்கப்பட்டன.
இப்பணிகள் முடிந்து இரண்டு நாள்களாகியும், குழிகளை முழுமையாக மூடாமல் விட்டுச் சென்றுள்ளனர் அந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், துண்டிக்கப்பட்ட இணைப்புகளும் சீர் செய்யப்படவில்லை.
இதனால், செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கடந்த நான்கு நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்குள்ள அஞ்சல் நிலையத்தில் உள்ள தொலைபேசி சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் சேவை பாதிப்பை சீர்செய்வதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கேபிள் பதிப்பதற்காக சாலையின் இருபுறங்களிலும் தோண்டப்பட்ட குழிகளில் வாகன ஓட்டிகளும் விழும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.