
"அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் டோக்கன் சிஸ்டம் கொண்டு வந்து, பணம் வாங்கிக் கொண்டு தி.மு.க.வினர் ஊழல் செய்கின்றனர்," என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்) குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை வாடிப்பட்டியில் தனது 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தீபாவளிக்கு சேலை
“அ.தி.மு.க. அரசு விவசாயிகளுக்கு இந்தியாவிலேயே அதிக இழப்பீட்டைப் பெற்றுத் தந்தது. மேலும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தரமான வேட்டி, சேலைகள் உரிய நேரத்தில் வழங்கப்படும். ஒவ்வொரு தீபாவளிக்கும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். மாணவர்களுகுக லேப்டாப் வழங்கும் திட்டமும் மீண்டும் செயல்படுத்தப்படும். அ.தி.மு.க. தான் மத்திய அரசிடம் இருந்து 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கான சம்பளமாக ₹2,999 கோடி நிதியை பெற்றுத் தந்தது.”
ஜல்லிக்கட்டு டோக்கன் ஊழல்
“தி.மு.க. அரசின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பாரம்பரிய முறைப்படி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு டோக்கன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. தி.மு.க.வினருக்கு வேண்டியவர்களுக்கு டோக்கன் கொடுத்து, பணம் வாங்கிக் கொண்டு ஊழல் செய்கின்றனர். உள்ளூரில் காளை வளர்ப்பவர்களுக்கு இதில் இடமில்லை.”
டாஸ்மாக் ஊழல்
“அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் திமுகவின் டாஸ்மாக் ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திலும் தி.மு.க. அரசு ஊழல் செய்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் திட்டங்களை அறிவிப்பதிலும், பெயர் சூட்டுவதிலும் மட்டும் சிறந்தவர். இப்போதுதான் மக்களுக்குப் பிரச்னை இருப்பதே அவருக்குத் தெரிந்திருக்கிறது. மக்களை ஏமாற்றுவதில் தி.மு.க. நம்பர் 1 கட்சி.”
ஜி.எஸ்.டி. மாற்றத்துக்கு வரவேற்பு
“மத்திய அரசு ஜி.எஸ்.டி.-யில் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது. இதனால் டிராக்டர் உள்ளிட்ட பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு சாமானிய மக்களுக்குப் பயனளிக்கும்”
இவ்வாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.