
உணர்வாலும், உள்ளத்தாலும் நான் தமிழச்சி …போராட்டக்களத்தில் குதித்த நடிகை நயன்தாரா
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தியும்,, பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியும் சென்னை மெரினாவில் இளைஞர்களும், மாணவர்களும் இன்று ஆறாவது நாளாக போராடி வருகின்றனர்.
இதேபோன்று மதுரை, அலங்காநல்லுர், கோவை,திருச்சி,நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது, இவர்களுக்கு ஆதரவாக குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மேலும் இப்போராட்டத்திற்கு திரைப்படத்துறையைச் சேர்ந்த நடிகர்கள்,நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
தமிழ்நாட்டில் தொடங்கிய இப்போராட்டம் இந்தியா தாண்டி தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.அமெரிக்கா,சீனா,ஜப்பான்,மலேசியா,சிங்கப்பூர், இலங்கை, ஜெர்மன் போன்ற நாடுகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்திட தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.
ஆனால் இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இச்சட்டம் தற்காலிகமானது என்றும் நிரந்தரமாக தடை நீக்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போதில்லை எனவும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் போராட்டத்துக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளார்..
கருப்பு நிறத்தில் டாப்ஸ் அணிந்து முகத்தை கருப்பு துணியால் மூடியபடி நேற்று நயன்தாரா போராட்டத்தில் கலந்து கொண்டார்.விவேகானந்தர் இல்லம் அருகே பொதுக்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நயன்தாரா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்.
இப்போராட்டம் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு தனது டவிட்டப் பக்கத்தில், 'இளைய தலைமுறையின் பலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு விட்டது.
கடந்த சில நாட்களாக தமிழகம் கண்டு வரும் எழுச்சி வரலாற்றில் இல்லாதது என்று சொல்லலாம். இந்த தருணத்தில் பிறப்பால் இல்லாவிட்டாலும், உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் இந்த தமிழத்தைச் சேர்ந்தவள்தான் என்னும் பெருமை என்னை தலைநிமிர வைக்கிறது.
இளைய தலைமுறையின் இந்த போராட்டம் அமைதியான முறையிலே நடப்பது நம்மை பெருமைப்பட வைக்கிறது என தெரிவித்திருந்தார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகை நயன்தாரா ஏற்கனவே டவிட்டர் மூலம் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் தற்போது நேரடியாக அவரே போராட்டக் களத்திற்கு வந்து பங்கேற்றது போராட்டக்காரர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது,