
மதுரை அலங்காநல்லூரில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டுப்போட்டியில் 350 காளைகள் வரை பங்கேற்கும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை 3-வது ஆண்டாக இந்த ஆண்டும் தொடர்ந்தது.
இதையடுத்து, மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தியே தீர வேண்டும் என்று தீர்மானம் செய்து, தன்னெழுச்சியாக திரண்டு அறவழிப்போராட்டம் நடத்தினர்.
கடந்த 5 நாட்களாக மாநிலம் முழுவதும் இளைஞர்களின் போராட்டம் காட்டுத்தீயாய் பரவியது.
அவசரச்சட்டம்
இதையடுத்து, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அரசுடன் அவசர, அவசரமாக ஆலோசனை செய்து, மத்திய சுற்றுச்சூழல், சட்ட அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் ஓப்புதல் பெற்று அவசரச் சட்டத்தைத் தயார் செய்தார். அதன்பின், குடியரசுத்தலைவர் ஒப்புதலைப் பெற்றபின், ஆளுநர் வித்யாசாகர் ராவ்அவசரச்சட்டத்தை பிறப்பித்தார்.
முதல்வர் தொடங்கி வைக்கிறார்
இதையடுத்து, இன்று அலங்காநல்லூரில் 2 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்த வாடிவாசல் திறக்கப்பட்டு, பாரம்பரிய ஜல்லிக்கட்டுப்போட்டி நடக்க இருக்கிறது. இந்த போட்டியை முதல்வர் பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் இன்று இரவு விமானம் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்றார்.
தமிழக ஆளுநர் அவசரச் சட்டம் பிறப்பித்த உடன் மதுரை மாவட்ட கலெக்டர்வீரராகவ ராவ், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வாடி வாசல், உள்ளிட்ட ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதிகளை ஆய்வு செய்தார்.
350 காளைகள்
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,“ அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப்போட்டியில் 350 காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.அலங்காநல்லூரில் இரு இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படும்.
பார்வையாளர்கள் வந்து செல்லும் வசதியாக பேருந்து வசதிக்கு ஏற்பாடு செய்து தரப்படும், 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
ஜல்லிக்கட்டுப்போட்டியில் பங்கேற்கும் காளைகளை ஆய்வு செய்ய 20 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன '' எனத் தெரிவித்தார்.
இதையடுத்து,போட்டி நடைபெறும் இடம், ஜல்லிக்கட்டுப் போட்டியை பொதுமக்கள் பார்க்க இருக்கும் பார்வைகள் பகுதி ஆகியவற்றை போலீஸ் டிஜஜி ஆனந்த்குமார்சோமானி ஆய்வு செய்தார்.
இந்தநிலையில் நாளை போட்டிக்காக கொண்டு வரப்பட்ட காளைகள் சிலவற்றை சிலர் தடுத்து திருப்பி அனுப்பினர்
நிரந்தர தீர்வு கிடைத்தால் தன அனுமதிப்போம் என்றும் சிலர் கோஷமிட்டனர்