
ஜல்லிக்கட்டு தொடர்பாக சென்னையில் நடந்த போராட்டத்தில் நேற்றுமுன்தினம் திடீரென வன்முறை வெடித்தது. இதனால், விமானநிலையத்தில் இருந்து வீட்டுக்குச் செல்ல முயன்ற கிரிக்கெட் வீரர் அஸ்வின் பயத்தில் காரில் பயணம் செய்யாமல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணம் செய்து போலீஸ் உதவியுடன் வீடு போய் சேர்ந்தார்.
ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மாணவர்கள், இளைஞர்கள் தன்எழுச்சியாக கடந்த ஒருவாரம் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து தமிழக அரசு , அவசரச்சட்டம் கொண்டு வந்து சட்டசபையில் நிறைவேற்றியது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லக் கூறி போலீசார் முற்பட்டபோது திடீரென வன்முறை வெடித்தது.
இதனால், புறநகர் ரெயில் சேவையும் சிறிதுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளரும், சென்னையைச் சேர்ந்தவருமான அஸ்வின், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முடித்துவிட்டு சென்னைக்கு நேற்றுமுன்தினம் திரும்பினார். ெசன்னை மேற்கு மாம்பலத்தில் வசித்தும் வரும் அஸ்வின், விமானநிலையத்தில் இறங்கியவுடன், காரில் வீட்டுக்குச் செல்ல முயன்றார்.
ஆனால், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக சென்னையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதை அறிந்தார். இதனால் காரில் செல்வதைத் தவிர்த்து, மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய விமானநிலையம் போலீசார் அஸ்வினிடம் கூறினர். இதையடுத்து விமானநிலைய போலீஸ் பாதுகாப்புடன் அஸ்வின் மெட்ரோ ரெயிலில் ஏறியதும், அவரைப் பார்த்த பயணிகள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். சிலர் உற்சாகத்தில் அவருடன் ெசல்பி எடுத்துக்கொண்டனர்.
அதன்பின், அசோக்நகர் மெட்ரோ நிலையத்தில் இறங்கி மேற்கு மாம்பலத்தில் உள்ள வீட்டுக்கு பாதுகாப்புடன் சென்றார். இது குறித்து டுவிட்டரில் அஸ்வின் வெளியிட்ட பதிவில், “ சென்னையில் பதற்றமான சூழல் ஏற்பட்டபோது, என்னை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பிவைத்த விமானநிலைய போலீசாருக்கு நன்றி'' எனத் தெரிவித்தார்.