
ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு நாளை ஜல்லிக்கட்டு நடப்பதாக அறிவிப்பு வெளியானதை பொதுமக்கள் தன்னெழுச்சியான இளைஞர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் இதற்குள் குளிர் காய்ந்த சில கும்பல் போராட்டத்தை நடத்துவோம் என மோதல் போக்கை வெளியிட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்காக ஆதரவு போராட்டம் தன்னெழுச்சியாக வலுப்பெற்று லட்சக்கணக்கான இளைஞர்களின் , பொதுமக்களின் போராட்டமாக மாறியது. கட்டுப்பாடோடு , நேர்த்தியாக சத்யாகிரஹம் நடத்திய இளைஞர்கள் பொதுமக்கள் எழுச்சியுடன் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்தனர்.
நாள் செல்ல செல்ல இந்த போராட்ட கும்பலுக்குள் பல அமைப்புகள் புகுந்தன. இந்த அமைப்புகள் ஆளுக்கொரு கோரிக்கையை வைத்து போராட்டத்தை வீரியப்படுத்தின. அவசர சட்டம் வேண்டும் ,ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் , காளைகள் அவிழ்த்து விடப்பட வேண்டும் என்று ஆரம்பித்த போராட்டம் போக போக பல்வேறு குழுக்களால் கோரிக்கைகள் வலுவாக வைக்கப்பட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மாட்டோம் என்கிற அளவுக்கு சென்றது.
தற்போது அவசர சட்டம் இயற்றப்பட்டு நாளை அலங்காநல்லூர் , பாளமேடு ,அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு பெரும்பாலான இளைஞர்கள் , பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது தற்காலிக தீர்வு நம்மை ஏமாற்றுகிறார்கள் நிரந்தர தீர்வு வேண்டும் என்று கோரிக்கையை வைக்கின்றனர். இதனால் போராட்ட களத்தில் இரு வேறு கருத்துகள் ஏற்பட்டுள்ளது. இதனால் போராட்டத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பொதுவான சிந்தனையுள்ள இளைஞர்கள் பொதுமக்கள் வெளியேறுவார்கள்.
போரட்டத்தை நீட்டிக்க நினைக்கும் அமைப்புகள் மீறி நடத்தினால் அது பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரலாம். அரசும் பலப்பிரயோகம் செய்து அவர்களை கலைக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.