
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் பிப்., 1 ம் தேதியும், 2 ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 5 ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என விழா கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி கடந்த 15 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 16 ஆம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை மெரினா, மதுரை தமுக்கம், கோவை வஉசி அரங்கம் உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போராட்டம் தீயாய் பரவியது. அலங்காநல்லூரில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது.
இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு சார்பில் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நேற்று ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து ஊர் கமிட்டி நேற்று கூடியது. அதில் ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் பிறப்பிக்கப்பட்டதால், வரும் 1 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவது என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற பாலமேட்டில் பிப்ரவரி 2 தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பிப்ரவரி 5ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்கும் என விழாக்குழவினர் அறிவித்துள்ளனர். காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை ஜல்லிக்கட்டு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராம விழாக்கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டில் 500 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்கின்றனர்.